சத்தியமங்கலம் அருகே பரபரப்பு டிரைவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி கடத்தப்பட்ட லாரி மீட்பு; மற்றொரு லாாி டிரைவா் கைது
சத்தியமங்கலம் அருகே டிரைவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி லாரியை கடத்திய மற்றொரு லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட லாரி மீட்கப்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி
சத்தியமங்கலம் அருகே டிரைவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி லாரியை கடத்திய மற்றொரு லாரிடிரை வரை போலீசார் கைது செய்தனர். லாரி மீட்கப்பட்டது.
லாரியில் ஏறினார்
கர்நாடகா மாநிலம் மைசூரு வினோபா நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 45). லாரி டிரைவர். இவர் கடந்த மாதம் 29-ந் தேதி மைசூரில் இருந்து காப்பிக்கொட்டை பாரம் ஏற்றிக்கொண்டு கோவை மாவட்டம் வால்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். கர்நாடகா மாநிலம் புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் அவர் சென்றபோது, அங்கு வந்த ஒருவர் லாரியை நிறுத்தினார். பின்னர் அசோக்குமாரிடம் அவர் தான் லாரி டிரைவர் என்றும், தனக்கு தற்போது வேலையில்லை என்றும், உங்களுடன் நானும் வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரை அசோக்குமார் லாரியில் ஏற்றிக்கொண்டு வால்பாறை சென்று காப்பிக்கொட்டை பாரம் இறக்கிவிட்டு, அங்கிருந்து பொள்ளாச்சி சென்றார். அங்கு 2 பேரும் லாரியிலேயே தங்கினர். அப்போது அவர் அசோக்குமாரிடம் தான் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள கானூர்புதூர் பகுதியை சேர்ந்தவர் என்றும், தன்னுடைய பெயர் அய்யாசாமி என்றும் கூறியுள்ளார்.
மிளகாய் பொடி தூவல்
பின்னர் 2 பேரும் பொள்ளாச்சி மடத்துக்குளத்தில் இருந்து பேப்பர் லோடு ஏற்றி சென்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜன் நகர் அருகே நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தனர். ராஜன் நகர் அருகே ஒரு பாலத்தில் சென்றபோது அருகில் இருந்த அய்யாசாமி தனது சட்டைப்பையில் இருந்த ஒரு பொட்டலத்தை எடுத்துள்ளார்.
பின்னர் அதில் இருந்த மிளகாய் பொடியை திடீரென அசோக்குமார் மீது தூவினார். இதனால் அவருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பயந்து லாரியை நிறுத்திவிட்டு இறங்கி அருகே உள்ள பண்ணாரி சோதனைச்சாவடிக்கு சென்று போலீசாரை அழைத்து வந்தார்.
கடத்தியவர் கைது
உடனே அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. அப்போது தான் அய்யாசாமி அந்த லாரியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பண்ணாரி சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அது அசோக்குமாருடையது என்பதும், லாரியை கடத்தியது அய்யாசாமி (38) என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாரியை மீட்டனர்.