ஈரோட்டில் மாடியில் இருந்து தவறி விழுந்த நிதி நிறுவன அதிபர் சாவு; செல்போன் பேசியதால் விபரீதம்

ஈரோட்டில், மாடியில் இருந்து தவறி விழுந்த நிதி நிறுவன அதிபர் இறந்தார். செல்போன் பேசியதால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2021-09-03 21:07 GMT
ஈரோடு
ஈரோட்டில், மாடியில் இருந்து தவறி விழுந்த நிதி நிறுவன அதிபர் இறந்தார். செல்போன் பேசியதால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
நிதி நிறுவன அதிபர்
கரூர் மாவட்டம் நியூ தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 52). இவர் கரூரில் சொந்தமாக நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இதன் காரணமாக ராமலிங்கம் ஈரோடு நாராயண வலசு, திரு.வி.க. நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து வாரத்தில் 2 நாட்கள் தங்கி இருந்து பணம் வசூல் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமலிங்கம் தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது கால் தவறி எதிர்பாராத விதமாக ராமலிங்கம் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார்.
சாவு
இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ராமலிங்கம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராமலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து நிதி நிறுவன அதிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்