கர்நாடகத்தில் புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் - அஸ்வத் நாராயணுக்கு, சித்தராமையா கடிதம்
கர்நாடக அரசு அமல்படுத்தி உள்ள தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்று மந்திரி அஸ்வத் நாராயணுக்கு, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா, உயர்கல்வி துறை மந்திரி அஸ்வத் நாராயணுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
சரியான முடிவு அல்ல
கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கை 2020-யை அரசு அமல்படுத்தி உள்ளது. கர்நாடகத்தில் தற்போது தேசிய கல்வி கொள்கையை நிபுணர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுடன் ஆலோசிக்காமல் திடீரென்று அரசு அமல்படுத்தி இருக்கிறது. புதிய தேசிய கொள்கையில் இருக்கும் சாதகம் மற்றும் பாதகங்கள் குறித்து விரிவாக எந்த ஒரு விவாதமும் நடத்தாமல், இந்த கல்வி ஆண்டிலேயே புதிய தேசிய கல்வி கொள்கை 2020-யை அரசு அமல்படுத்தி இருப்பது சரியான முடிவு அல்ல.
தேசிய கொள்கையை அமல்படுத்திய பின்பு, அதுகுறித்து விவாதம் நடைபெறுவது தேவையற்றது. உயர்கல்வித்துறை மந்திரியாக இருக்கும் உங்களுக்கு, அதுபற்றி தெரியவில்லையா?. குவெம்புவின் கல்வி கொள்கை, அவரது உயர்தரமான கல்வி பற்றி அரசு பேசுகிறது. கல்வித்துறையில் பணியாற்றுபவர்களும், அது சம்பந்தப்பட்ட பணிகளில் இருப்பவர்களும் குவெம்பு நமக்கு அளித்த கல்வி பற்றிய தகவல்களை நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
திரும்ப பெற வேண்டும்
எந்த ஒரு நாட்டிலும் உயர் கல்வித்துறை சிறப்பாக இருந்தால் தான், அந்த நாட்டில் நிலவும் பிரச்சினைகளை சரியான முறையில் தீர்வு காண முடியும். ஏற்கனவே மாணவர்களின் வழங்கப்படும் புத்தகங்கள் அதிகரித்து, கல்விச்சுமை அதிகமாக இருக்கிறது.
புதிய கல்வி கொள்கையில் பல்வறேு பிரச்சினைகள் உள்ளது. இதுபற்றி விவாதிக்க வேண்டியது அவசியமாகும். இந்த புதிய கல்வி கொள்கையால் சாதாரண ஏழை, கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே கர்நாடக அரசு அமல்படுத்தி உள்ள புதிய கல்வி கொள்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.