மழை வேண்டி அர்ச்சகரின் உடலை தோண்டி எடுத்து கிராம மக்கள் பூஜை

சென்னப்பட்டணா தாலுகாவில் உடல்நலக்குறைவாக இறந்து அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மழை பெய்ய வேண்டி அர்ச்சகரின் உடலை தோண்டி எடுத்து கிராம மக்கள் பூஜை நடத்திய வினோத சம்பவம் நடந்துள்ளது.

Update: 2021-09-03 20:42 GMT
ராமநகர்:

அர்ச்சகர்

  ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணாபுரா கிராமத்தை சேர்ந்தவர் ரேக்காரப்பா(வயது 68). ஒவர் அங்குள்ள கோவிலில் அர்ச்சகராக இருந்து வந்தார். கடந்த மே மாதம் அவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். அவரது உடல், அவருக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

  அப்போது அவரது இறுதிச் சடங்குகளை கிராம மக்கள் முறையாக செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் மழை பெய்யாமல் இருந்து வந்தது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பல இடங்களில் வெளுத்து வாங்கினாலும், கிருஷ்ணாபுரா மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மழை பெய்யவில்லை. இதற்கு அர்ச்சகரின் உடலுக்கு சரியான முறையில் இறுதிச்சடங்கு செய்யாததே காரணம் என்று நம்பினர்.

உடலை தோண்டி எடுத்து பூஜை

  அதனால் கிராம முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி அர்ச்சகரின் உடலை தோண்டி எடுத்து பூஜை செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு அர்ச்சகரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது அவரது உடல் பாதியளவு அழுகிய நிலையில் எலும்பும், தோலுமாக இருந்தது. இருந்தாலும் கிராம மக்கள் அர்ச்சகரின் உடலை தோண்டி எடுத்து பூஜை செய்தனர்.

  அதன் பின்னர், உடலை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டனர். கிராம மக்களின் இந்த அத்துமீறிய செயலை அறிந்த அர்ச்சகரின் மகன் சந்தோஷ் இதுபற்றி அக்கூரு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கிருஷ்ணாபுரா கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்