போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் ஊழியர்களுக்கு பிடித்தம் இல்லாமல் முழு சம்பளம் வழங்கப்படும்-மந்திரி ஸ்ரீராமுலு
அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் ஊழியர்களுக்கு பிடித்தம் இல்லாமல் முழு சம்பளம் வழங்கப்படும் என்று மந்திரி ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு விதானசவுதாவில் நடந்த கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் 60-வது ஆண்டு விழாவில் போக்குவரத்து துறைமந்திரி ஸ்ரீராமுலு பேசியதாவது:-
மீட்க நடவடிக்கை
கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். அதன்படி, அரசு போக்குவரத்து கழகத்தை லாபகரமாக செயல்படுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
கொரோனா சந்தர்ப்பத்திலும் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள், பிற ஊழியர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றினார்கள். நாட்டிலேயே கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் பாதுகாப்பானது, நவீன வசதிகளை கொண்டது என்ற சிறப்பை பெற்றுள்ளது.
சம்பளம் நிறுத்தாமல் வழங்கப்படும்
கொரோனா சந்தர்ப்பத்தில் பஸ்கள் இயக்கப்படாததால் போக்குவரத்து கழகங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அப்படி இருந்தும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடக அரசு போக்குவரத்து கழங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.2,300 கோடியை ஒதுக்கி இருந்தார்.
அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும், ஊழியர்களுக்கு பிடித்தம் இல்லாமல் சம்பளம் வழங்கப்படும். போக்குவரத்து கழங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க தயார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்திருப்பதால், நஷ்டத்தில் இயங்கும் நமது கழகங்களை லாபகரமாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு ஸ்ரீராமுலு பேசினார்.