பொதுமக்களுக்கு மூலிகை மரக்கன்றுகள்
பொதுமக்களுக்கு மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இட்டமொழி:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா ஆலோசனையின்பேரில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், ‘மக்களைத் தேடி இந்திய மருத்துவம்’ என்ற திட்டத்தில் பொதுமக்களுக்கு மூலிகை மரக்கன்றுகள் வழங்கும் விழா, முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு மூலிகை மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார். சித்த மருத்துவத்தின் பயன்கள் குறித்து சித்த மருத்துவர் வரதராஜன் விளக்கி கூறினார். கறிவேப்பிலை, ஓமவல்லி, நொச்சி, ஆடாதோடை, வேம்பு, மலைவேம்பு, நிலவேம்பு, புங்கை, கற்றாழை உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட மூலிகை மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். விழாவில் பல் டாக்டர் பிரியதாரணி, சித்த மருந்தாளுனர் சுப்புலட்சுமி, டி.வி.எஸ். கள அலுவலர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.