கியாஸ் சிலிண்டருக்கு பாடைகட்டி மாதர் சங்கத்தினர் போராட்டம்

விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு பாடைகட்டி மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-09-03 20:04 GMT
வாடிப்பட்டி
விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு பாடைகட்டி மாதர் சங்கத்தினர் போராட்டம்  நடத்தினர்.
பாடை கட்டினர்
சமையல் கியாஸ் தொடர் சிலிண்டர் விலை உயர்வினை கண்டித்து மதுரை புறநகர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து சென்று ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரேமலதா தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய் போராட்டத்தை தொடக்கி வைத்தார். இதில் ஒன்றிய தலைவர் சின்னம்மாள், செயலாளர் இந்திரா, மாவட்ட குழு உறுப்பினர் மலர்விழி, அமிர்தவள்ளி, மாவட்ட நிர்வாகிகள் மோகன், விஜயா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராணி, சரஸ்வதி, சித்ரா, காளியம்மாள், தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். 
பரபரப்பு
இந்த போராட்டம் தோடேனேரி பிரிவில் தொடங்கி அரசு மேல்நிலைப்பள்ளி, வீரையா கோவில் பிரிவு, கோனார் தெரு வழியாக மெயின்பஜார், வைகை ரோடு பிரிவு, பஸ் நிறுத்தம் ஊராட்சி மன்ற சமுதாயக்கூடம், பள்ளிவாசல் வழியாக தாரை தப்பட்டை அடித்துக் கொண்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிலிண்டருக்கு நாமம் அணிவித்து தூக்கி வந்தனர். 
பின் கீழே இறக்கி வைத்து அதை சுற்றி ஒப்பாரி பாடல் பாடி நூதன போராட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை
இதேபோல் மதுரையிலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநகர் மாவட்டம் சார்பில் சிம்மக்கல் பகுதியில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாவட்ட செயலாளர் சசிகலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி, பொருளாளர் லதா, மாவட்ட நிர்வாகிகள் ஜெயராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, கியாஸ்விலையை குறைத்திட நடவடிக்கை வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். 
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், மத்திய அரசு தொடர்ந்து கியாஸ் விலையை உயர்த்தி வருகிறது. அதே போல் தான் பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தி வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கிறது. எனவே சாமானிய, நடுத்தர மக்களின் நலனில் அக்கறைகொண்டு விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்