முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் பள்ளியில் மதிய உணவை சாப்பிட்டு கலெக்டர் ஆய்வு
முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் பள்ளியில் மதிய உணவை சாப்பிட்டு கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.;
ராசிபுரம்:
மதிய உணவு
ராசிபுரம் அருகே முள்ளுகுறிச்சியில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் பள்ளியில் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளா? என பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளிக்கு வரும் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் பள்ளியில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார். உணவு பட்டியல் படி மாணவர்களுக்கு உணவுகள் வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் மாணவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டார்.
கொரோனா தடுப்பூசி
தொடர்ந்து மெட்டாலாவில் உள்ள தனியார் கல்லூரியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார். அப்போது அவர் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆய்வின்போது நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமார், ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன் மற்றும் சுந்தரம் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.