பேரணாம்பட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே உள்ள மிட்டப்பல்லி கெம்ப சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டாபி (வயது 42). பேரணாம்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை 11 மணியளவில் பேரணாம்பட்டு டவுன் புத்துக் கோவில் பின்புறம் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்சாரத்தை துண்டித்து விட்டு பழுதை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் மின்சாரம் சரியாக துண்டிக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி பட்டாபி மயங்கிய நிலையில் டிரான்ஸ்பார்மரில் தொங்கினார்.
இதனை பார்த்த பொதுமக்கள் இது குறித்து பேரணாம்பட்டு மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று பட்டாபியை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் பட்டாபியின் மனைவி நிர்மலா புகார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.