வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
பெரியகுளம் அருகே மலைக்கிராமத்தில் சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்ததால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, கருங்கல் பாறை, குறவன்குழி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி கேட்டு சுமார் 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சோத்துப்பாறை அணை பகுதியிலிருந்து குறவன்குழி கிராமத்துக்கு 4 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை அமைக்க அரசு உத்தரவிட்டது.
இதற்காக ரூ.29 லட்சத்து 88 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று சாலை அமைக்கும் பணி தொடங்க இருந்தது. ஆனால் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதி என்பதால் சாலை அமைக்கும் பணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனை அறிந்த மலைக்கிராம மக்கள் வனத்துறையினரை கண்டித்து அகமலை ஊராட்சி தலைவர் லதா ரஞ்சித்குமார் தலைமையில் சோத்துப்பாறை அணைப்பகுதியில் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரியகுளம் தென்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கிராம மக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.