கஞ்சா விற்ற 3 பேர் கைது
மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை, செப். 4-
மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்பனை
மயிலாடுதுறை ரெயிலடி கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கிட்டப்பா பாலம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் கார்த்திக் (வயது 20) என்பதும், அவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சீர்காழியில்
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சீர்காழி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தபோது திருமுல்லைவாசல் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஸ்ரீதர் மகன் பரணிதரன் (20) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கஞ்சா விற்பனை செய்த கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த வீரமணி மகன் விக்கி என்கிற விக்னேஷ் (24) என்பவரை கைதுசெய்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கண்ட 2 பேரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.