சோலையாறு சேடல்டேம் ஆற்றில் குளிக்க தடை
பயிற்சி டாக்டர் அடித்து செல்லப்பட்டதால் சோலையாறு சேடல்டேம் ஆற்றில் குளிக்க தடை விதித்து போலீசார் அறிவித்து உள்ளனர்.
வால்பாறை
பயிற்சி டாக்டர் அடித்து செல்லப்பட்டதால் சோலையாறு சேடல்டேம் ஆற்றில் குளிக்க தடை விதித்து போலீசார் அறிவித்து உள்ளனர்.
சேடல்டேம் ஆறு
வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணையில் இருந்து சேடல்டேம் ஆறு வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்கிறது. 160 அடி உயரம் கொண்ட சோலையாறு அணை நிரம்பி வழிவதால், பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக சேடல்டேம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி பயிற்சி டாக்டர்கள் 5 பேர் சோலையாறு வந்தனர்.
பின்னர் அவர்கள் சேடல்டேம் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது சென்னை மாம்பலத்தை சேர்ந்த பயிற்சி டாக்டர் ஸ்ரீராம் (வயது 25) தண்ணீரில் அடித்துச்செல்லப் பட்டார். 5 நாட்கள் ஆகியும் அவர் கதி என்ன என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நீச்சல் வீரர்கள் உதவியுடன் தேடியும் பயன் இல்லை. எனவே மேல் மற்றும் கீழ் நீரார் அணைகளில் இருந்து சோலையாறு அணைக்கு திறந்து விடும் தண்ணீரின் அளவை குறைப்பதன் மூலம் ஆற்றில் செல்லும் தண்ணீர் குறைந்துவிடும். எனவே அதற்கான முயற்சி நடந்து வருகிறது.
குளிக்க தடை
இந்த நிலையில் சேடல்டேம் ஆற்றில் குளிக்க ஷேக்கல் முடி போலீசார் தடை விதித்து அறிவித்து உள்ளனர். அத்துடன் அதற்கான அறிவிப்பு பலகையும் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. தடையை மீறி சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி குளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, சேடல் டேம் ஆறு ஆழம் கொண்டது. எனவே அதில் அதிவேகத்தில் தண்ணீர் செல்லும். அத்துடன் பாறைகள் அதிகம் இருப்பதால் சுழலும் உண்டு.
எனவே இந்த ஆற்றிலோ அல்லது ஆற்றில் உள்ள நீர்வீழ்ச்சியிலோ சுற்றுலா பயணிகள் இறங்கி குளிக்கக்கூடாது. யாராவது குளித்தால் தகவல் தெரிவிக்கலாம் என்றனர்.