துடியலூர்
கோவையை அடுத்த துடியலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
கோவை-மேட்டுப்பாளையம் ரோடு துடியலூர் உருமாண்டம்பாளை யத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 58). மாற்று திறனாளியான இவர், செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவருடைய மனைவி தங்கம்மாள் (50). இவர்களுடைய மகன்கள் தங்கராஜ் (33), வேல்மணி (25). இவர்கள் கூலி வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் நேற்று காலை 7 மணி அளவில் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று முருகனின் வீட்டு மேற்கூரை ஓடுகள் பயங்கர சத்தத்துடன் இடிந்து நொறுங்கி விழுந்தன.
மேலும் சுவர்களும் இடிந்து சேதமடைந்தன. இதனால் வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன.
ஆனால் வீட்டை விட்டு அனைவரும் வெளியே நின்றதால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. மழை காரணமாக முருகனின் வீட்டுச்சுவர்கள் இடிந்ததால், மேற்கூரை ஓடுகளும் உடைந்து நொறுங்கியதாக தெரிகிறது.