சோளிங்கரில் ஒரு டன் புகையிலை பொருட்கள்; ரூ.7 லட்சம் பறிமுதல். வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைது

சோளிங்கரில் தடைசெய்யப்பட்ட ஒரு டன் புகையிலை பொருட்கள், ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-03 16:45 GMT
சோளிங்கர்

சோளிங்கரில் தடைசெய்யப்பட்ட ஒரு டன் புகையிலை பொருட்கள், ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநிலத்தை  சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

புகையிலை பொருட்கள்

சோளிங்கர் -பாணவரம் கூட்ரோடு பகுதியில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக மோட்டார்சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் சந்தேகத்திற்கிடமாக வந்த 2 வட மாநில வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்கள் சாக்கு மூட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்குவைத்து அவர்களிடம் புகையிலை பொருட்களை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் இருவரும் வடமாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 25), நீமாரா (28) என்பதும், பாணாவரம் கூட்ரோடு பகுதியில்  குடோன் வைத்து, புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. 

ரூ.7 லட்சம் பறிமுதல்

அதன்பேரில் போலீசார், குடோனுக்கு சென்று பார்த்தபோது அங்கு சுமார் ஒரு டன் அளவுக்கு  பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. அதை பறிமுதல் செய்தபோலீசார், குடோனில் பணியாற்றி வந்த கால்ராம் (32), லட்சுமணன் (24) ஆகியோரை கைது செய்தனர். அதன் உரிமையாளர் கோவிந்தராம் (32) என்பவர் போலீஸ் நிலையம் எதிரே குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்ததுள்ளார். அவரையும், சுரேஷ்குமார், நாமாரா ஆகியோரையும்  போலீசார் கைது செய்தனர்.  

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வைத்திருந்த ரூ.7 லட்சம் மற்றும் புகையிைல பொருட்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல்செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்