தர்மபுரியில் பரபரப்பு பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை புதரில் வீச்சு போலீசார் விசாரணை

தர்மபுரியில் பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தையை புதரில் வீசி சென்ற பெற்றோர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-09-03 16:43 GMT
தர்மபுரி,

தர்மபுரியில் பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தையை புதரில் வீசி சென்ற பெற்றோர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் குழந்தை வீச்சு

தர்மபுரி நெடுமாறன் நகர் பகுதியிலுள்ள ரெயில் ரோட்டுக்கு அருகில் உள்ள புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் அந்த புதருக்கு சென்று பார்த்தனர். அப்போது ஒரு குழந்தை துணியில் சுற்றி வீசப்பட்டு கிடந்தது தெரியவந்தது. உடனே பொதுமக்கள் அந்த குழந்தையை எடுத்து பார்த்தபோது பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை என தெரியவந்தது. 

இதுகுறித்து பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் சாக்கன் மற்றும் தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த ஆண் குழந்தையை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் விசாரணை

அங்கு அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பிறந்து 2 நாட்களே ஆன அந்த ஆண் குழந்தையை புதரில் வீசி சென்றவர்கள் குறித்தும், குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தையை வீசி சென்றார்களா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் தர்மபுரி பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த 2 நாட்களில் பிறந்த குழந்தைகளின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். ஆண் குழந்தை புதரில் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்