கைதியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கைதியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Update: 2021-09-03 16:01 GMT
திருப்பூர்:
அவினாசி கிளை சிறையில் இருந்த போது உயிரிழந்த கைதியின் உடலை வாங்க மறுத்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 
கைதி சாவு 
சங்கரன்கோவிலை சேர்ந்தவர் தென்காசி தங்கபாண்டியன். இவரது மகன் கட்டிசாமி (வயது 40). ஒரு வழக்கு தொடர்பாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்ட கட்டிசாமி கடந்த 30-ந் தேதி அவினாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். 
கட்டிசாமிக்கு உடல் நிலை சரியில்லை என கடந்த 1-ந் தேதி மாலை அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே கட்டிசாமியின் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். 
போராட்டம் 
இந்த நிலையில் நேற்று காலை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவினாசி மாஜிஸ்திரேட்டு விபிசி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையில் கட்டிசாமியின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிவாரண தொகை வழங்க வேண்டும் எனக்கூறி கட்டிசாமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக  அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன், தெற்கு போலீஸ் துணை கமிஷனர் வரதராஜன் மற்றும் அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நிவாரண தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர். இதனை உறவினர்கள் ஏற்றுக்கொண்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது. இறந்த கட்டிசாமிக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 

மேலும் செய்திகள்