பழனி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயற்சி

பழனியில் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர்.

Update: 2021-09-03 15:55 GMT
பழனி:
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பழனி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள், பச்சளநாயக்கன்பட்டி பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். 
ஆர்ப்பாட்டத்தின்போது, பச்சளநாயக்கன்பட்டி ஆதிதிராவிட விவசாயிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் காலதாமதம் செய்வதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதற்கிடையே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பழனி டவுன் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் பழனி தாசில்தார் சசி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆதிதிராவிட விவசாயிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்