அரசு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அரசு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-09-03 12:07 GMT
திருவண்ணாமலை

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அரசு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 10-ந் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்து அமைப்பினர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. 

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா வரவேற்றார். 

கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தியன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அலுவலர்கள் விளக்கமாக தெரிவித்தனர். 

பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து அமைப்பினர் பேசியதாவது:- 

வியாபாரிகளின் வாழ்வாதாரம்

விநாயகர் சதுர்த்தி விழாவை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். கடந்த 30-ந் தேதி பொது இடங்களில் பெரிய விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதித்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாகவே சிலை செய்யும் இடங்களுக்கு போலீசார் சென்று அங்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். விழா காலங்களில் தான் பல்வேறு தரப்பு வியாபாரிகள் பயன்பெறுவார்கள்.

விநாயகர் சதுர்த்தியை விழாவாக பார்க்காமல் கொரோனா ஊரடங்கினால் போதிய வருவாய் இல்லாமல் பல்வேறு கடன் பிரச்சினைகளில் இருக்கும் சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரமாக பார்க்க வேண்டும். கடந்த விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி இல்லை. இந்த ஆண்டும் அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

இதனால் விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களின் நிலை மோசமாக உள்ளது. பல லட்சம் ரூபாய் கடனில் சிக்கி தவிக்கிறோம். நிவாரண நிதி கேட்டு கடந்த ஆண்டு மனு அளித்தோம். இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விநாயகர் சதுர்த்திக்கு கம்பு, சோளம் போன்ற பூஜைக்கு பயன்படுத்தப்படும். இந்த விழாவினால் விவசாயிகள் பலர் பயனடைந்து வந்தனர். 

தடையை மீறி நடத்துவோம்

இந்த நிலையில் தொடர்ந்து 2-ம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா தடையால் கடன் பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் விநாயகர் சிலை வைக்க தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அரசு அனுமிதி அளிக்கப்படவில்லை என்றால் இந்து அமைப்பினர் சார்பில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-

சட்டப்படி நடவடிக்கை

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றை முழுமையாக குறைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை யார் பின்பற்றாமல் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 கூட்டத்தில் இந்து அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்