அனைத்து தொழிலாளர்களும் கொரோனா தடுப்பூசியை சிறப்பு முகாம்களில் செலுத்தி கொள்ள காஞ்சீபுர கலெக்டர் அறிவுறுத்தல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று தாக்கத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் முக்கிய பங்காக தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக அளித்து வருகிறது. அதனை தொடர்ந்து தொழிற்சாலைகள் நிறைந்துள்ள காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் 3-ம் கட்ட தடுப்பூசி போடும் முகாமை துரிதப்படுத்தும் பொருட்டு தொழில் நிறுவனங்கள் அதிகமாக இயங்கி வரும் சிப்காட் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, மாம்பாக்கம், பிள்ளைப்பாக்கம், வல்லம்வடகால், ஒரகடம், திருமுடிவாக்கம் போன்ற இடங்களில் தினந்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. எனவே, தொழிலாளர்கள் இந்த முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
சிப்காட் மற்றும் சிட்கோவில் உள்ள நிறுவனங்கள் தவிர ஏனைய தொழில் நிறுவன தொழிலாளர்களும் நகர்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு 100 சதவீதம் தடுப்பூசி போட்டு கொண்ட மாவட்டம் என்ற இலக்கை அடைய அனைவரும் விடாமுயற்சியுடன் கடைசி ஒரு தொழிலாளர் வரை தடுப்பூசி போட்டு கொள்ள செய்ய வேண்டும்.
கொரோனா தொற்றை ஒழிக்க தொழிற்சாலைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட தொழில் மையம், பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம். (044-27238837, 9688036736).
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.