ஒரத்தூர் நீர்த்தேக்க பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ஒரத்தூர் நீர்த்தேக்க தடுப்பணை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர்த்தேக்கம்
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணியின் கீழ் அடையாற்றின் கிளை நதியான ஒரத்தூர் ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி ஒரு ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.இங்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையால் மழைக்காலத்தில் வெள்ள மானது கடலில் வீணாக கலப்பதை தடுக்க முடியும்.கடந்த ஆண்டு அதிகாரிகள் பார்வையிட்ட போது இந்த நீர்த்தேக்கம் ஓரத்தூர் ஏரி, ஆரம்பாக்கம் ஏரி மற்றும் ஒரத்தூர் அணைக்கட்டு இணைத்து 763 ஏக்கர் நீர்ப்பரப்புடன் உள்ளதாக நீர்த்தேக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தால் சென்னை பெருநகரத்திற்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க இயலும். வெள்ளத்தடுப்பு மற்றும் குடிநீர் பயன்பாட்டில் 12 லட்சம் மக்கள் இந்த திட்டத்தால் பயன் பெறுவார்கள். பணிகளும் விரைந்து முடிக்கப்படும் என கடந்த ஆண்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிலையில் பணி தொடங்கி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் தடுப்பணை பகுதிகளிலும் நீர் வெளியேறும் கால்வாய் பகுதிகளிலும் பணி இன்னும் முழுமையாக முடிவடையாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
கோரிக்கை
கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தால் வரதராஜபுரம், மணிமங்கலம், ஆதனூர், முடிச்சூர் போன்ற பகுதிகளில் அதிக அளவில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்படைந்தனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தடுப்பணை மற்றும் கால்வாய் பகுதிகளில் நடைபெற்றுவரும் பணி எப்போது முடியும் எனவும் பணிகள் தாமதமின்றி முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.