முதுமலை புலிகள் காப்பகம் இன்று திறப்பு

முதுமலை புலிகள் காப்பகம் இன்று(வெள்ளிக்கிழமை) திறக்கப்படுகிறது. அங்கு யானை சவாரி 6-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2021-09-03 00:51 GMT
கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகம் இன்று(வெள்ளிக்கிழமை) திறக்கப்படுகிறது. அங்கு யானை சவாரி 6-ந் தேதி தொடங்குகிறது.

முதுமலை புலிகள் காப்பகம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகம், 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு காட்டுயானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இது தவிர முகாம்களில் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. காப்பகத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க வனத்துறை சார்பில் வாகன மற்றும் வளர்ப்பு யானை சவாரி நடத்தப்படுகிறது. 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக காப்பகம் மூடப்பட்டது. அங்கு அலுவல் பணிகள் மட்டுமே நடைபெற்று வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி காப்பக பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இன்று திறப்பு

இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புலிகள் காப்பகங்கள், சரணாலயங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்டவை நேற்று திறக்கப்பட்டது. ஆனால் முதுமலை புலிகள் காப்பகம் மட்டும் திறக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முதுமலை புலிகள் காப்பகத்தை திறப்பது குறித்து கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர். பின்னர் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் முதுமலை புலிகள் காப்பகத்தை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் வனப்பகுதிக்கு சென்று சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் வாகன சவாரி உடனடியாக தொடங்கப் படுகிறது. 

யானை சவாரி

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:-
முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 50 சதவீத சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். முக்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்க வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 6-ந் தேதி முதல் யானை சவாரி தொடங்கப்படும். 

அன்றைய தினம் தங்கும் விடுதிகளும் திறக்கப்படுகிறது. இதிலும் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து வனத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்