மண்சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

குன்னூரில் மண்சரிவால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Update: 2021-09-03 00:50 GMT
குன்னூர்

குன்னூரில் மண்சரிவால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 

கட்டுமான பணி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மவுண்ட் ரோட்டில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நடைபாதை அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு மேடான பகுதியை சமன் செய்யும் பணி நடந்தது. இந்த பணியில் 2 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

கடந்த 29-ந் தேதி மதியம் 2.45 மணியளவில் நடந்த பணியின்போது, அங்கு திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் 2 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் யோகேஷ் கண்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  

மீண்டும் மண்சரிவு

எனினும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று இருந்ததால், அங்கு கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள தடுப்புச்சுவர் ஓரத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதில் குடிநீர் குழாய்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. 

மேலும் மண்சரிவால் அரசு ஆஸ்பத்திரியின் ஆக்சிஜன் ஜெனரேட்டர் அறை மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அந்தரத்தில் தொங்குகின்றன.

சப்-கலெக்டர் ஆய்வு

இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, தாசில்தார் தினேஷ்குமார், மின்வாரிய உதவி பொறியாளர் ஜான்சன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அந்த நில உரிமையாளர் யோகேஷ் கண்ணனிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் சேதம் அடைந்த மின்கம்பங்களை பொக்லைன் எந்திரம் உதவியுடன் சீரமைக்கும் பணியில் 40 மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். 

மேலும் அந்தரத்தில் தொங்கும் கட்டிடங்களின் பாதுகாப்புக்காக நெடுஞ்சாலைத்துறை மூலம் 3 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்