கொடுமுடி அருகே பயங்கரம் பீர்பாட்டிலால் குத்தி விவசாயி படுகொலை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கொடுமுடி அருகே பீர் பாட்டிலால் குத்தி விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.;

Update: 2021-09-02 21:52 GMT
கொடுமுடி
கொடுமுடி அருகே பீர் பாட்டிலால் குத்தி விவசாயி படுகொலை செய்யப்பட்டார். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
கொடுமுடி அருகே உள்ள நாகமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 67). விவசாயி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (65). 
இவர்களுடைய மகன் கண்ணன். திருமணம் ஆகிவிட்டது. வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மகள் சிந்து தேவி. திருமணம் ஆகி கோவையில் தனது கணவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 
மாட்டுத்தொழுவத்துக்கு...
கோபாலுக்கு சொந்தமான மாட்டுத்தொழுவம் நாகமநாயக்கன்பாளையத்தில் இருந்து நொய்யல் செல்லும் வழியில் உள்ளது. அங்கு மாடுகளை கட்டி வளர்த்து வந்தார். அதில் பசு மாடு ஒன்று கன்றுக்குட்டி ஈனும் நிலையில் இருந்தது. எனவே அந்த பசுமாட்டை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு அவர் மாட்டுத்தொழுவத்துக்கு சென்று உள்ளார்.  ஆனால் வெகுநேரமாகியும் வராததால் அவருடைய செல்போனுக்கு மனைவி ராஜேஸ்வரி தொடர்பு கொண்டார். ஆனால் செல்போனை அவர் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் உதவியுடன் இரவு முழுவதும் கோபாலை தேடிப்பார்த்தார். கண்டுபிடிக்க முடியவில்லை. 
குத்திக்கொலை
இந்த நிலையில் மாட்டுத்தொழுவத்துக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் தலையில் ரத்தக்காயங்களுடன் கோபால் நேற்று காலை இறந்து கிடந்ததை அவருடைய உறவினர்கள் பார்த்து உள்ளனர். 
இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோபாலின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கோபால் தலைப்பகுதியில் வீக்கம் இருந்தது. நெற்றியில் பாட்டிலால் ஆழமாக குத்திய காயம் இருந்தது.  அவரது உடல் அருகில் பீர்பாட்டில் நொறுங்கி கிடந்தது. எனவே மர்மநபர்கள் பீர்பாட்டிலால் அவரை முதலில் தலையில் அடித்து, பின்னர் நெற்றியில் குத்தியது தெரிய வந்தது. 
வலைவீச்சு
 மேலும் சம்பவ இடத்துக்கு ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய்  கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி தடய அறிவியல் நிபுணர்கள், சம்பவ இடத்தில் தடயங்களை பதிவு செய்தனர்.  
 இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை கொலை செய்த மர்மநபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொடுமுடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்