உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
பெண்ணாடம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டாா்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் எல்லையம்மன் கோவில் தெருவில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் வழக்கல்போல் கோவிலை பூட்டிவிட்டு பூசாரி சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை பூஜை செய்வதற்காக சுப்பிரமணியன் கோவிலுக்கு வந்தார். அப்போது அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை காணவில்லை. அதனை மர்மநபர் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெண்ணாடம் பஸ் நிறுத்தம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெண்ணாடம் சோழன்நகர் பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி (வயது 25) என்பது தெரிந்தது. மேலும் அவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் சுவர் ஏறி உள்ளே குதித்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.