மணல் குவாரி திறக்காததால் மாட்டு வண்டி தொழிலாளி தீக்குளிப்பு
மணல் குவாரி திறக்கப்படாததால், மாட்டுவண்டித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர்:
மணல் குவாரி திறக்கப்படாததால், மாட்டுவண்டித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொழிலாளி தீக்குளிப்பு
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 37). இவர், மாட்டு வண்டியில் மணல் அள்ளி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
பாஸ்கர் தனது ஊரில் தீக்குளித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வைரலாகி வரும் ஆடியோ
இந்த நிலையில், "தான் எப்படியும் உயிரிழந்து விடுவேன். தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எம் மக்கள் (மாட்டு வண்டி தொழிலாளர்கள்) நல்லா வாழணும். அரசாங்கம் மாட்டு வண்டிக்கென மணல் குவாரியை திறக்கணும்" என உயிருக்கு ஆபத்தான நிலையிலும் பாஸ்கர் பேசி ஆடியோ வெளியிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் போராட்டம்
இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் மணல் மாட்டு வண்டி தொழிலாளி பாஸ்கரை சி.ஐ.டி.யூ. தஞ்சை மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில், மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் சென்று சந்தித்தனர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களை கேட்டுக்கொண்டனர்.
பின்னர் அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் தொழிலாளி பாஸ்கருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அவருடைய குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மூடப்பட்ட மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதில் மணல் மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், தங்கையன், சோமசுந்தரம், அலெக்சாண்டர், செல்வம், மூர்த்தி, இம்மானுவேல், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.