முக கவசங்களை அலட்சியப்படுத்தும் மாணவ-மாணவிகள்

பள்ளிக்கூடங்களை விட்டு வெளியே வந்ததும் முக கவசங்களை மாணவ-மாணவிகள் அலட்சியப்படுத்தி, போடாமல் செல்கின்றனர். அவர்களுக்கு நோய் பரவும் முன் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது.

Update: 2021-09-02 19:15 GMT
கடலூர், 

கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கூடங்களை திறக்க உத்தரவிட்டது.
அதன்படி நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் 9-ம் வகுப்பு முதல்12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் 469 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காற்றில் பறக்க விட்டனர்

முக கவசம் அணிந்து தான் வர வேண்டும். வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்டமாக அமர்ந்து பேச, சாப்பிடக்கூடாது. சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்பது போன்ற பல்வேறு அறிவுரைகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கினர். அதன்படி மாணவர்களும் வகுப்பறையில் அதை கடைபிடித்தனர்.
ஆனால் பள்ளிக்கூடம் முடிந்து மாலையில் வீடு திரும்பும் போது, மாணவ-மாணவிகள் பெரும்பாலானோர் முக கவசத்தை அலட்சியப்படுத்தி போடவில்லை. பள்ளிக்கூடங்களில் யாருக்கோ அறிவுரை கூறியது போல அவர்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டனர். முக கவசத்தையும் துளியும் மதிக்கவில்லை. கூட்டம், கூட்டமாக மாணவர்கள் பஸ் நிறுத்தம், பஸ்களில் சென்றதை பார்க்க முடிந்தது.

புரிய வைக்க வேண்டும்

வேன், ஆட்டோக்களிலும் சென்ற மாணவர்களும் முக கவசத்தை காற்றில் பறக்க விட்டபடி ஹாயாக சென்றதை பார்க்க முடிந்தது. இதை பார்க்கும் போது கொரோனா 3-வது அலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே நோய் தாக்கம் ஏற்படுவதற்கு முன்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இது பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், நாங்கள் பள்ளியில் இருக்கும் போது மாணவர்கள் ஒழுங்காக இருக்கிறார்கள். இது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஆனால் வெளியில் செல்லும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவர்களின் கடமை. இதை பெற்றோர் கண்டிப்புடன் தங்களின் குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும் என்றார்.
இதேநிலையில் தான் கல்லூரி மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனினும் முக கவசம் அணிவதில் ஆர்வம் செலுத்துவதில்லை. இந்த நிலையை அவர்கள் போக்க வேண்டும்.

மேலும் செய்திகள்