மதுபாட்டில்கள்-சாராயம் கடத்தி சென்ற காரை மோட்டார் சைக்கிளில் விரட்டி பிடித்த ஏட்டு
திருவாருரில், மதுபாட்டில்கள், சாராயம் கடத்தி சென்ற காரை சினிமா பாணியில் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று மடக்கி பிடித்த ஏட்டை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டி பரிசு வழங்கினார்.
திருவாரூர்:
திருவாருரில், மதுபாட்டில்கள், சாராயம் கடத்தி சென்ற காரை சினிமா பாணியில் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று மடக்கி பிடித்த ஏட்டை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டி பரிசு வழங்கினார்.
மின்னல் வேகத்தில் சென்ற கார்
திருவாரூர் வாளவாய்கால் பகுதியில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், ஏட்டு சரவணன் ஆகியோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது நாகை பகுதியில் இருந்து திருவாரூர் நோக்கி வேகமாக வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தினர். ஆனால் அந்த கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து வேகமாக சென்றது.
விரட்டிச்சென்று பிடித்தார்
இது குறித்து அவர்கள் உடனடியாக விளமல் பகுதியில் பணியில் இருந்த ஏட்டு கமலநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விளமல் பகுதிக்கு வந்த அந்த காரை ஏட்டு கமலநாதன் நிறுத்த முயன்றார்.
அப்போது சாலையோரத்தில் நிறுத்தி இருந்த அவருடைய மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளி விட்டு அந்த கார் அங்கிருந்து சென்றது. இதனையடுத்து கமலநாதன் தனது மோட்டார் சைக்கிளில் அந்த காரை விரட்டிச்சென்று சிறிது தூரத்தில் மடக்கி பிடித்தார்.
மதுபாட்டில்கள்-சாராயம் பறிமுதல்
பின்னர் காரை சோதனை செய்தபோது அந்த காரில் புதுச்சேரி மதுபாட்டில்கள், சாராயம் ஆகியவை இருந்தது தெரிய வந்தது. அவற்றை காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து கார் டிரைவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த இந்திரகுமார்(வயது 29) மற்றும் அதே பகுதியை சேர்ந்த முத்துமுருகன்(37) ஆகிய இருவரையும் பிடித்து திருவாரூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருவாரூர் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திரகுமார், முத்துமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தி வந்த 400 மதுபாட்டில், 50 லிட்டர் சாராயம் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
சினிமா பாணியில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்தி சென்ற காரை போலீசார் விரட்டி சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறப்பாக செயல்பட்டு மது கடத்தியவர்களை பிடித்த போக்குவரத்து ஏட்டு கமலநாதனை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டி பரிசு வழங்கினார்.