தென்னை தொழில்நுட்பம் குறித்த கையேடு வெளியீடு
பொள்ளாச்சி அருகே ஆழியாறில் தென்னை தொழில்நுட்பம் குறித்த கையேடு வெளியிடப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஆழியாறில் தென்னை தொழில்நுட்பம் குறித்த கையேடு வெளியிடப்பட்டது.
தென்னை தினவிழா
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று தென்னை தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தென்னையில் உயர் விளைச்சலுக்கான தொழில் நுட்பம் குறித்த மாநில கருத்தரங்கு நடைபெற்றது.
விழாவுக்கு கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்னையில் உள்ள இடர்பாடுகளை களைய விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வேண்டும். வேளாண்மை பல்கலைக்கழகத்தால் திசு வளர்ப்பு தென்னை மேம்படுத்தப்பட்டு உள்ளது.
எதிர் உயிரிகள் மற்றும் நுண்ணூயிர்களை கொண்டு தஞ்சாவூர் வாடல் நோயை கட்டுப்படுத்த தொழில்நுட்ப உத்திகள் வகுக்கப்பட்டு உள்ளன.
செம்மறி ஆடு வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம், ஊடுபயிர் சாகுபடி ஆகியவற்றை பின்பற்றி விவசாயிகள் விலை ஏற்றத் தாழ்வுகளை ஈடு செய்யலாம்.
தென்னையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வேர் வாடல் நோயை நுண்ணூயிர் கூட்டு கலவையை பயன்படுத்தி ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வேளாண்மை பல்கலைக்கழகம் ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்னை தொழில்நுட்பங்கள்
கோவை தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் புகழேந்தி பேசும்போது கூறுகையில், தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான செறிவூட்டப் பட்ட கரித்தூள், தென்னை நார் கட்டி போன்றவற்றை தயாரித்து நிகர லாபத்தை அதிகரிக்கலாம் என்றார்.
முன்னதாக தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பிரணீதா வரவேற்று பேசினார்.
கருத்தரங்களில் தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட தமிழகத்தின் மேற்கு மண்டலத்திற்கு உகந்த தென்னை ரகங்கள், தென்னை நாற்றாங்கால் உற்பத்தி தொழில்நுட்பங்கள், இளம் தென்னங்கன்றுகள் பராமரிப்பு முறைகள், தென்னையில் வேர்வாடல் நோய் மற்றும் இலை கருகல் நோய் மேலாண்மை முறைகள் ஆகிய தொழில்நுட்ப கையேடுகள் துணை வேந்தர் குமார் வெளியிட்டார்.
இதில் வேளாண்மை பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்கத்தின் இயக்குனர் ஆனந்தன், வேளாண்மை பல்கலைக்கழக மேலாண்மை குழு உறுப்பினர்கள் சேதுபதி, கிருஷ்ணசாமி, முன்னாள் உறுப்பினர் சோமசுந்தரம் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் இணை பேராசிரியர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.