விவசாயியை தாக்கிய 2 பேர் கைது
குளித்தலை அருகே மது குடிக்க பணம் கேட்டு விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
குளித்தலை,
விவசாயி
குளித்தலை அருகே உள்ள மருதூர் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 49), விவசாயி. இவர் நேற்று முன்தினம் குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அங்கிருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
தண்ணீர்பள்ளி-கல்லுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளி பகுதியை சேர்ந்த சந்தனபாண்டியன் (26), தினேஷ்குமார் (25), திருப்பதி, ரத்தினம்பிள்ளைபுதூர் பகுதியை சேர்ந்த காளை என்கிற மணிகண்டன் ஆகிய 4 பேரும் சிவக்குமாரை வழிமறித்து அவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர்.
2 பேர் கைது
சிவக்குமார் பணம் தர மறுக்கவே அவரை மற்ற 4 பேரும் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அரிவாளால் அவருடைய மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனபாண்டியன், தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள திருப்பதி, மணிகண்டன் ஆகியோரை வலைவீசி தேடிவருகின்றனர்.