ஆறுகாட்டுத்துறை மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்கள் கொள்ளை
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள், கொள்ளையடித்து சென்றனர்.
வேதாரண்யம்:
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள், கொள்ளையடித்து சென்றனர்.
இலங்கை கடற்கொள்ளையர்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீஸ் சரகம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராம கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் மாலை சிவக்குமார் (வயது 32) என்பவருக்கு சொந்தமான படகில் ஆறுகாட்டுத்துறை சுனாமி நகரை சேர்ந்த சின்னத்தம்பி(72), சிவா(33), திருமால்(30), வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்த விவேக்(34) ஆகிய 4 மீனவர்களும் கோடியக்கரைக்கு கிழக்கே 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
இரவு 10 மணியளவில் இவர்களது படகு அருகே இரண்டு படகு வந்தது. அந்த படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் இருந்துள்ளனர். அவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகை சுற்றி வளைத்துள்ளனர்.
ரூ.1 லட்சம் பொருட்கள் கொள்ளை
பின்னர் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் கத்தி மற்றும் இரும்பு பைப்களுடன் ஏறி மிரட்டியுள்ளனர். அப்போது மீனவர் சிவா ஏதோ கூறியுள்ளார். உடனே அவரை கடலில் குதிக்குமாறு இலங்கை கடற்கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர்.
வேறு வழியின்றி அவர் கடலில் குதித்து வலைகளை பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் அவர்கள், ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகில் இருந்த பொருட்களான வாக்கி-டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரி, இன்ெவர்ட்டர், செல்போன், டூல்ஸ் பாக்ஸ், பத்து கிலோ கயிறு, 4 மழை கோட்டுகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துக்கொண்டு தாங்கள் வந்த படகில் ஏறி அங்கிருந்து சென்று விட்டனர்.
போலீசில் புகார்
அவர்கள் சென்ற பிறகு கடலிலில் மிதந்து கொண்டு இருந்த சிவா படகிற்கு திரும்பி வந்தார். பின்னர் மீனவர்கள் அனைவரும் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு நேற்று வந்து சேர்ந்தனர்.
இதுகுறித்து படகு உரிமையாளர் சிவக்குமார் வேதாரண்யம் கடலோர காவல் படை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு
இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களை தாக்கி ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.