முதியவரிடம் ரூ.2 லட்சம் நூதன வழிப்பறி
10 ரூபாய் நோட்டை கீழே போட்டு முதியவரிடம் ரூ.2 லட்சம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்
10 ரூபாய் நோட்டை கீழே போட்டு முதியவரிடம் ரூ.2 லட்சம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த கட்டளை கிராமம் ஆதிகேசவ பெருமாள் தெருவை சேர்ந்தவர் வீரசிம்மன் (வயது 65), விவசாயி.
இவர் இன்று மதியம் காவேரிப்பாக்கத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு கிராமத்துக்கு சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
வழியில் நவலோகசுந்தரி அம்மன் கோவில் அருகில் முதியவர் சென்றபோது, அவரை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 2 ேபர் ஒரு 10 ரூபாய் நோட்டை கீழே போட்டு விட்டு, முதியவரிடம் உங்கள் பணம் ரூ.10 கீழே விழுந்துள்ளது, எனக் கூறினர்.
உடனே முதியவர் கீழே குனிந்து 10 ரூபாய் நோட்டை எடுத்துள்ளார். அந்த நேரத்தில் திடீரென மர்மநபர்கள், முதியவர் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை பறித்துச் சென்றனர்.
அதிர்ச்சியடைந்த முதியவர் திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிட்டு கதறினார். எனினும், வழிப்பறி கொள்ளையர்கள் மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து முதியவர் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.2 லட்சத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.