ஒற்றைக்காலில் நின்று இந்து முன்னணியினர் போராட்டம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊர்வலம் நடத்த அனுமதிக்கக்கோரி ஒற்றைக்காலில் நின்று இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
ஊர்வலம் நடத்த தடை
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் வருகிற 10-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.
வழக்கமாக விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு அமலில் உள்ளதால் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்ல அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஒற்றைக்காலில் நின்று...
அதன்படி திண்டுக்கல்லில் இந்து முன்னணியினர் சார்பில் கோவில்களுக்கு சென்று தெய்வங்களிடம் முறையிடும் போராட்டம் நேற்று நடந்தது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் முன்பு நடந்த போராட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு ஒற்றைக்காலில் நின்று கோஷமிட்டனர்.
அம்மனிடம் முறையீடு
அப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு மட்டும் அரசு தடைவிதித்துள்ளது.
தடையை நீக்க சக்தி கொடு மாரியம்மன் தாயே...! தடை விதித்தவர்களே அதனை நீக்க அருள்புரியவேண்டும் என்று அம்மனிடம் முறையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதேபோல் அபிராமி அம்மன் கோவில் முன்பு நடந்த போராட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சஞ்சீவிராஜ் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் சங்கர்கணேஷ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தின் போது விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊர்வலம் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. மேலும் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்காத அதிகாரிகளை கண்டிக்கும் வகையில் மணலை வாரி தூற்றி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோப்புக்கரணம் போட்டு வேண்டுதல்
இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதி வேண்டி பழனியில் உள்ள கோவில்கள் முன்பு வேண்டுதல் போராட்டம் நடைபெற்றது. பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் தொடங்கிய இந்த போராட்டத்துக்கு மதுரை கோட்ட செயலாளர் பாலன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன், பொருளாளர் அருண், துணைத்தலைவர்கள் ராஜா, பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தின்போது வழக்கமான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற வேண்டும் என்று கோவில்களில் வேண்டி கொண்டனர்.
பழனி நகரில் 17 கோவில்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. இறுதியாக பாதவிநாயகர் கோவில் முன்பு நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தோப்புக்கரணம் போட்டும், சதுர்த்தி கொண்டாட அனுமதி வேண்டும் என்றும் கோஷமிட்டனர். தொடர்ந்து மலைக்கோவில் சென்று வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வடமதுரை, வேடசந்தூர்
இதேபோல் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில் முன்பு பிரார்த்தனை செய்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் சங்கர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சிவனேசன் (அய்யலூர்), ஈஸ்வரன் (வடமதுரை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தியும், மாநில அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வேடசந்தூரில் குங்குமக்காளியம்மன் கோவில் தெருவில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் விபூசனன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர் விஜயகுமார், ஒன்றிய தலைவர் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.