டாஸ்மாக் கடையை மூடக்கோரி அரசு பஸ்சை சிறைப்பிடித்து ெபாதுமக்கள் சாலைமறியல்

தானிப்பாடி அருகே மதுபாட்டில்கள் வாங்க வந்தவர்களின் மோட்டார்சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.;

Update: 2021-09-02 16:10 GMT
தண்டராம்பட்டு

தானிப்பாடி அருகே மதுபாட்டில்கள் வாங்க வந்தவர்களின் மோட்டார்சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் கடை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தானிப்பாடி அருகிலுள்ள கீழ்ப்பாய்ச்சார் கிராமத்தில் முருகன் கோவில் அருகே டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. 

நேற்று இரவு மோத்தக்கல் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (வயது37) அஜித்குமார் (36) இருவரும் மோட்டார் சைக்கிளில் மதுபானம் வாங்குவதற்காக வந்தனர். 

அதே கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் (57), இவரது மனைவி செல்வி (55) உறவினர் பழனியம்மாள் (65) ஆகிய 3 பேரும் சாலையோரம் உள்ள வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 

பெண் சாவு

அப்போது மதுபாட்டில்களை வாங்க வந்தவர்களின் மோட்டார்சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே செல்வி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த மணிவேல் தானிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பழனியம்மாள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் காளிமுத்து, அஜித்குமார் ஆகிய இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு பஸ் சிறைப்பிடிப்பு

இந்த நிலையில் இன்று பகல் 2.30 மணியளவில் இறந்த செல்வியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி அரூரில் இருந்து தானிப்பாடி செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் 2 மணிநேரம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த தண்டராம்பட்டு தாசில்தார் பரிமளா, டாஸ்மாக் மண்டல மேலாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் தீபன் சக்கரவர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் காஞ்சனா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது 15 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

இந்த விபத்து குறித்து தானிப்பாடி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்