தூத்துக்குடி: ஆள்மாறாட்டம் மூலம் நிலமோசடி; 3 பேர் கைது

ஆள்மாறாட்டம் மூலம் நிலமோசடி 3 பேர் கைது

Update: 2021-09-02 15:53 GMT
தூத்துக்குடி:
எட்டயபுரம் தாலுகா லக்கம்மாள் தேவிபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி மணியம் மகன் முத்துசாமி (வயது 72) என்பவருக்கு சொந்தமாக ஆத்திக்கிணறு கிராமத்தில் 2 ஏக்கர் 90 செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை மதுரை துரைச்சாமி நகர், அஸ்வின் தெருவைச் சேர்ந்த தொந்தி என்பவரது மகன் பெருமாள் (54), தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வி.ஐ.பி கோல்டன் நகரைச் சேர்ந்த செல்லப்பா மகன் மயில்வாகனன் (47), எட்டயபுரம், ஆத்திக்கிணறு காலனித் தெருவைச் சேர்ந்த முத்துசாமி மகன் ஜேசுமணி (60) மற்றும் சிலரும் சேர்ந்து முத்துசாமியின் நிலத்தை அபகரிக்க வேண்டும் என்று கூட்டுச் சதி செய்து, ஜேசுமணி என்பவர் முத்துசாமி என்ற பெயரில் போலி அடையாள அட்டை தயார் செய்து உள்ளார். 
அதனை உண்மைபோன்று பயன்படுத்தி மேற்படி நிலத்தை உரிமையாளர் முத்துசாமி பொது அதிகாரம் எழுதிக் கொடுப்பது போல 13.7.2020 அன்று எட்டயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மயில்வாகனன் என்பவருக்கு போலியாக பொது அதிகாரப் பத்திரம் பதிவு செய்து கொடுத்து உள்ளார். பின்னர் மயில்வாகணன் என்பவர் 14.7.2020 அன்று அதே சார்பதிவாளர் அலுவலகத்தில் பெருமாள் என்பவருக்கு போலி கிரையப் பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார். 
இதுகுறித்து புகாரின் பேரில் தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு (பொறுப்பு) துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மேற்பார்வையில் தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், விஜயகுமார், நாராயணன், சரவண சங்கர், மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட பெருமாள், மயில்வாகணன், ஜேசுமணி ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்