திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. கலசபாக்கத்தில் அதிகபட்சமாக 123.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது.

Update: 2021-09-02 15:44 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. கலசபாக்கத்தில் அதிகபட்சமாக 123.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது. 

பலத்த மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 

அதன்படி, திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் இருந்து நேற்று அதிகாலை 5 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. 

 சுவர் இடிந்து விழுந்தது

ஆரணி நகரிலும் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலும் பெய்த மழையால் ஆரணி கோட்டை வடக்கு பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி ராஜா என்பவரது வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ராஜா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

வாணாபுரம்

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

தொடர் மழையால் குங்கிலிய நத்தம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. மேலும் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது. 

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தச்சம்பட்டில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். 

 கலசபாக்கத்தில் 123.6 மில்லி மீட்டர் மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 123.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதியில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- 

செய்யாறு- 65, போளூர்- 56.4, செங்கம்- 47.4, சேத்துப்பட்டு- 37.6, ஆரணி மற்றும் திருவண்ணாமலை- 32, கீழ்பென்னாத்தூர்- 20, தண்டராம்பட்டு- 10.4, ஜமுனாமரத்தூர்- 7, வெம்பாக்கம்- 2 ஆகும்.

மேலும் செய்திகள்