கோவை
விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்க கோரி கோவையில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடவும் ஊர்வலம் நடத் தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறத்தியும்
இந்து முன்னணியினர் நேற்று காலை கோவை -அவினாசி சாலையில் உள்ள தண்டுமாரியம்மன் கோவிலுக்குள் சென்று சாமி சிலை முன்பு மண்டியிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
இதை அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
உண்ணாவிரத போராட்டம்
இதேபோல் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ரத்தின விநாயகர் கோவிலில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
மேலும் இந்து மக்கள் புரட்சிப்படை சார்பில் காந்திபுரம் சிக்னல் அருகே உள்ள சித்திவிநாயகர் கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதற்கு அகில பாரத மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார்.
இந்து மக்கள் புரட்சிப்படை நிறுவன தலைவர் பீமாபாண்டி, சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கம் நிறுவன தலைவி சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அவர்கள், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.