ஆசிரியர் பயிற்சி மாணவ மாணவிகள் திடீர் போராட்டம்
வேலூரில் ஆசிரியர் பயிற்சி மாணவ மாணவிகள் ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
வேலூர்
வேலூரில் ஆசிரியர் பயிற்சி மாணவ மாணவிகள் ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடக்கக்கல்வி பட்டய தேர்வு
ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தொடக்கக்கல்வி பட்டய தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்வு வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 234 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களுக்கு வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளி, செயின்ட்மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தொடக்கக்கல்வி பட்டய தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி காலை 8.30 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர்.
போராட்டம்
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளிக்கு தேர்வு எழுத வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கூறி திடீரென தேர்வு மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் தேர்வு மையத்தின் முன்பு உள்ள சாலையில் மறியல் செய்ய முயன்றனர். இதனை அறிந்த வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
மனுவாக கொடுங்கள்
அப்போது மாணவர்கள் தொடக்கக்கல்வி பட்டய தேர்வை ஆன்லைன் மூலம் எழுத அனுமதிக்க வேண்டும். நேரடியாக தேர்வு எழுதுவதை புறக்கணிப்போம் என்று தெரிவித்தனர்.
அதற்கு அதிகாரிகள், தேர்வு எழுத விண்ணப்பிக்கும்போது ஆன்லைனில் தேர்வு எழுதுகிறோம் என்று குறிப்பிடவில்லை. எனவே நேரடியாக தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு எழுதி விட்டு உங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள். இது குறித்து அரசுக்கு தெரியப்படுத்துவோம் என்று தெரிவித்தனர்.
அதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு தேர்வு எழுத சென்றனர். இந்த சம்பவத்தால் தேர்வு மையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
98 பேர் பங்கேற்கவில்லை
தொடக்கக்கல்வி பட்டய தேர்வை 136 மாணவர்கள் எழுதினார்கள். 98 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 3 தேர்வு மையங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு மையம், தேர்வறை கண்காணிப்பு பணியில் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர்.