குப்பைகள் மறுசுழற்சி செய்யும் மையங்களில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கட்டிட இடிபாட்டு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் 360 டன் திறன் கொண்ட ஆலை அமைக்கும் பணி அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்று செயல்பாடுகள் தொடங்கும் நிலையில் உள்ளது.

Update: 2021-09-02 03:11 GMT
இந்தநிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி நேற்று கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட சின்ன சேக்காடு பகுதியில் அமைந்துள்ள உயிரி எரிவாயு மையம், பைராலிஸிஸ் மையம், காற்றுப்புகும் முறையில் உரம் தயாரிக்கும் மையம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நெருக்கி கட்டுகளாக மாற்றும் எந்திரத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த 2 மறுசுழற்சி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த கமிஷனர் மேற்கண்ட மறுசுழற்சி மையங்களில் அவற்றின் முழு திறன் அளவுக்கு குப்பைகளை மறுசுழற்சி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது துணை கமிஷனர் டாக்டர் எஸ்.மனிஷ், வடக்கு வட்டார துணை கமிஷனர் சினேகா உள்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.

மேலும் செய்திகள்