மேற்கூரை பழுதான பஸ்களில் குடை பிடித்தபடி பயணிக்கும் மக்கள்

கூடலூர், பந்தலூரில் மழை பெய்து வருவதால் மேற்கூரை பழுதடைந்த அரசு பஸ்களில் குடை பிடித்தபடி மக்கள் பயணிக்கின்றனர். அவர்கள் அரசு பஸ்களை முறையாக பராமரிக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-09-02 01:00 GMT
கூடலூர்

கூடலூர், பந்தலூரில் மழை பெய்து வருவதால் மேற்கூரை பழுதடைந்த அரசு பஸ்களில் குடை பிடித்தபடி மக்கள் பயணிக்கின்றனர். அவர்கள் அரசு பஸ்களை முறையாக பராமரிக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பழுதடைந்த பஸ்கள்

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் பழுதடைந்த அரசு பஸ்களே இயக்கப்படுகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் தாலுகாகளில் இயக்கப்படும் பஸ்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. கூடலூரில் இருந்து உடுமலைபேட்டை, சேலம், ஈரோடு, சென்னை, கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு இயக்கப்படும் பஸ்கள் நல்ல நிலையில் உள்ளது. 

ஆனால் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இயக்கப்படும் பஸ்கள் மிகவும் பழுதடைந்து உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பருவமழை பெய்கிறது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் பழுதடைந்த பஸ்களில் மேற்கூரை வழியாக ஒழுகும் மழை நீரில் நனைந்தபடி பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

வழிந்தோடும் மழைநீர்

குறிப்பாக கூடலூரில் இருந்து பந்தலூர், கொளப்பள்ளி, சேரம்பாடி, பாட்டவயல் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களின் மேற்கூரைகள் மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் உள்ளே வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் பஸ்சுக்குள் அமர்ந்தவாறு குடைகளை பிடித்தபடி பயணம் செய்து வருகின்றனர்.

முறையாக பராமரிக்க...

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மழைக்காலத்துக்கு முன்பு பழைய மற்றும் பழுதடைந்த பஸ்களை சம்பந்தப்பட்ட துறையினர் முன்னெச்சரிக்கையாக சீரமைத்திருக்க வேண்டும். மேலும் ஊரடங்கு காலத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

அந்த சமயத்தில் சீரமைப்பு பணி மேற்கொண்டு இருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை. எனவே இனிமேலாவது பழுதடைந்த பஸ்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்