அனுமதியின்றி சில்வர் ஓக் மரங்களை ஏற்றி சென்ற 4 லாரிகள் பறிமுதல்
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு உரிய அனுமதியின்றி சில்வர் ஓக் மரங்களை ஏற்றி சென்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு உரிய அனுமதியின்றி சில்வர் ஓக் மரங்களை ஏற்றி சென்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சில்வர் ஓக் மரங்கள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை கிராமத்தில் வனத்துறை சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இந்த சாலையில் நேற்று முன்தினம் இரவு சில்வர் ஓக் மரங்கள் ஏற்றப்பட்ட 4 லாரிகள் சென்றன. அந்த லாரிகளை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி மரங்கள் வெட்டப்பட்டு, விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.
எனவே அந்த லாரிகளுடன் மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் மற்றும் லாரி டிரைவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடைமுறையை தளர்த்த வேண்டும்
இதுகுறித்து கோத்தகிரி பகுதி விவசாயிகள் கூறியதாவது:- தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக வளர்க்கப்படும் சில்வர் ஓக் மரங்களை வெட்டி விற்பனை செய்வதற்கு வனத்துறை மற்றும் வருவாய்த்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
இந்த நடைமுறையை தளர்வு செய்து, சில்வர் ஓக் மரங்களை விவசாய பயிராக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். குழந்தைகளின் படிப்பு செலவு போன்றவற்றை ஈடு செய்ய சில்வர் ஓக் மரங்களை வெட்டி விற்பனை செய்கிறோம். அதற்கு கொண்டு செல்லும்போது வனத்துறையினர் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்கின்றனர்.
எனவே விவசாயிகள் நலன் கருதி சில்வர் ஓக் மரங்களை வெட்டி விற்பனை செய்ய அனுமதி பெற வேண்டியது இல்லை என்ற தளர்வை அளிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.