ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடம், கல்லூரிகள் திறப்பு; மாணவ -மாணவிகள் உற்சாகம்

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவ -மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Update: 2021-09-01 21:15 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவ -மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மாணவ -மாணவிகள்  உற்சாகம்
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனினும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியதையொட்டியும், மாணவ-மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் நேற்று முதல் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறந்து வகுப்புகள் நடத்திக்கொள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 406 பள்ளிக்கூடங்களில் 395 பள்ளிக்கூடங்கள் நேற்று அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து திறக்கப்பட்டு, நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. 11 பள்ளிக்கூடங்கள் சில காரணங்களால் திறக்கப்படவில்லை. நடப்பு கல்வி ஆண்டில் முதல் முறையாக நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன், முக கவசம் அணிந்து பள்ளிக்கூடத்துக்கு வந்தனர்.
விழிப்புணர்வு
பள்ளிக்கூட வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் போடப்பட்டிருந்த வட்டத்தில் நின்று, வரிசையாக வந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்து, வகுப்புக்கு அனுப்பி வைத்தனர்.
வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், ஒரு மேஜைக்கு 2 மாணவர்கள் வீதம் அமர வைத்து உளவியல் ரீதியான பாடங்கள் நடத்தப்பட்டது. மேலும், பள்ளிக்கூடங்களின் நுழைவு வாயில் முதல் அனைத்து வகுப்பறைகளின் முன்பும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிவப்பு கம்பள வரவேற்பு
ஈரோடு கருங்கல்பாளையம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, மாணவிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னர், ஆசிரியர்கள், மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். இதேபோல், பல்வேறு பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீண்ட நாட்கள் கழித்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் தங்களது நண்பர்களையும், தோழிகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரமான முறையில் உணவு சமைத்து வழங்கப்பட்டது. முதல் நாளிலேயே முட்டையுடன் உணவு வழங்கப்பட்டதால், மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
கல்லூரிகள் திறப்பு
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் நேற்று திறக்கப்பட்டன. கல்லூரி மாணவ-மாணவிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழை, கல்லூரி வளாகத்தில் நின்றிருந்த பேராசிரியர்களிடம் காண்பித்து கல்லூரிக்குள் சென்றனர். கேரளா மாநிலத்தில் இருந்து கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும், கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்றிதழை 72 மணி நேரத்துக்குள் காண்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சான்றிதழ் இல்லாத மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. பள்ளிக்கூட மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று அரசு பஸ்களில் தங்களது அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் மேற்கொண்டனர்.
உளவியல் வகுப்புகள்
இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்கள் மொத்தம் 406 உள்ளன. இதில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1 லட்சத்து 9 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று (அதாவது நேற்று) 395 பள்ளிக்கூடங்கள் மட்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. சுழற்சி முறையில் சுமார் 75 சதவீத மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வந்திருந்தனர். பள்ளிக்கூடத்துக்கு வரவேண்டி மாணவ-மாணவிகளை கட்டாயப்படுத்தவில்லை. 45 நாட்களுக்கு உளவியல் ரீதியாக மாணவ-மாணவிகளை தயார்படுத்தும் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட உள்ளது.
அதாவது, ஏற்கனவே அவர்கள் தேர்ச்சி பெற்ற வகுப்புகளில் படித்த பாடங்களை நினைவு கூர்ந்தும், மனதளவில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், புத்தாக்க பயிற்சிகளும், அரசு வெளியிட்ட உளவியல் அறிவுறுத்தல் குறித்து வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்