இரும்பு கப்பி தாக்கியதில் மீனவர் பலி

முட்டம் அருகே ஆழ்கடலில் மீன் பிடித்தபோது இரும்பு கம்பி தாக்கியதில் மீனவர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2021-09-01 21:04 GMT
குளச்சல்:
முட்டம் அருகே ஆழ்கடலில் மீன் பிடித்தபோது இரும்பு கம்பி தாக்கியதில் மீனவர் பரிதாபமாக இறந்தார். 
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
 மீனவர்
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் வினோ (வயது 38), மீனவர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் மீன் பிடிதொழில் செய்து வந்தார்.
கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு இவர் சொந்த ஊர் திரும்பினார். அதன்பிறகு வெளிநாட்டுக்கு செல்லாமல் இங்கேயே விசைப்படகில் மீன் பிடி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 
வலைகள் சிக்கின
இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி வழக்கம்போல் வினோ கடியப்பட்டணத்தை சேர்ந்த சகாயசேகர் (45) என்பவரின் விசைப்படகில் முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றார். இவருடன் 14 மீனவர்களும் சென்றனர். நேற்று இவர்கள் முட்டத்தில் இருந்து 28 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, அருகில் மற்றொரு படகில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். திடீரென இரு படகுகளின் வலையும் ஒன்றோடு ஒன்றாக சிக்கி கொண்டன. அந்த சமயத்தில் வலையில் உள்ள சிக்கலை எடுக்க வினோ முயற்சி செய்தார். 
கப்பி மோதி பலி
இந்தநிலையில் படகில் இருந்த கயிறு (ரோப்) திடீரென விடுப்பட்டதால், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த இரும்பு கப்பி வினோவின் முகத்தில் வேகமாக மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் படகில் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் உடனே அவரை மீட்டு அவசரமாக கரைக்கு திரும்பினர். பின்னர், வினோவை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வினோ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர் சகாயசேகர் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்சிலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த வினோவுக்கு மேரி கலா(35) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
ஆழ்கடலில் விசைப்படகில் மீன்பிடித்தபோது இரும்பு கம்பி தாக்கியதில் மீனவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்