மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்; கலெக்டர் தலைமையில் நடந்தது
நெல்லையில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
நெல்லை:
நெல்லையில் மாவட்ட கண்காணிப்புக் குழுக்கூட்டம், கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது.
கண்காணிப்பு குழு கூட்டம்
இந்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி.ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள்.
கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி. பேசியதாவது:-
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் ஏழை மக்களுக்கான திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் நிலம் இல்லாதவர்களுக்கு வீடு பெற முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து வீடு இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கி வீடு கட்டித் தரவேண்டும். இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே வீடு இருக்கும் பலரும் பயன் பெற்றுள்ளனர். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. பாதி அளவு கூட இந்த திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் விஷ்ணு
கலெக்டர் விஷ்ணு கூறுகையில், “2012-ல் சமூக பொருளாதார கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்கெடுப்பின்படி பலர் வீடு பெற முடியவில்லை. இது தொடர்பாக அரசுக்கு தெரிவித்து 2018-ல் விடுபட்டவர்கள் குறித்த கணக்கெடுப்பு அவாஸ் பிளஸ் என நடத்தப்பட்டது. இதன் மூலம் 13 ஆயிரம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிலம் இல்லாதவர்களுக்கு பட்டா வழங்குவதற்காக வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
1000 படுக்கைகள்
நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் கூறுகையில், “நெல்லை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.86 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள், வென்டிலேட்டர் கொடுத்து உதவியுள்ளார். இதன் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க முடிந்தது. நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் அனுமதி பெற்று தந்துள்ளார். அவருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட வன அலுவலர் முருகன், கண்காணிப்புக் குழு உறுப்பினர் திருமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.