பெங்களூருவில் தினமும் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மாநகராட்சி தகவல்

பெங்களூருவில் தினமும் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2021-09-01 20:24 GMT
பெங்களூரு:

 பெங்களூரு மாநகராட்சி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

1 லட்சம் பேருக்கு தடுப்பூசி

  பெங்களூரு மாநகராட்சியில் அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது மிக விரைவாக போட திட்டம் வகுத்துள்ளோம். இந்த இலக்கை அடைய நாங்கள் சில திட்டங்களை வகுத்துள்ளோம். பெங்களூருவில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதற்கேற்ப தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்படும்.

  பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தரமான தடுப்பூசி மையங்களை அமைத்துள்ளோம். அதில் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தடுப்பூசி போடப்படும். இந்த பணியை இன்று(நேற்று) முதல் தொடங்கியுள்ளோம். மேலும் பெங்களூருவில் உள்ள சட்டசபை தொகுதிகளில் தலா 2 மையங்களில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும்.

மென்பொருள் பூங்காக்கள்

  குடிசை வாழ் மக்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்தி அந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நடமாடும் தடுப்பூசி மையங்கள் மூலம் பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட்டுகள், மென்பொருள் பூங்காக்களில் தடுப்பூசி செலுத்தப்படும். வாரத்தில் ஒரு நாள் தடுப்பூசி திருவிழா நடத்தப்படும். அந்த நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும்.
  இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்