தொழிற்பேட்டைகளில் உலக தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் - அதிகாரிகளுக்கு மந்திரி முருகேஷ் நிரானி உத்தரவு
தொழிற்பேட்டைகளில் உலக தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி முருகேஷ் நிரானி உத்தரவிட்டுள்ளார்.
ராமநகர்:
கடும் நடவடிக்கை
தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி நேற்று ராமநகரில் உள்ள பிடதி, ஆனேக்கல்லில் உள்ள ஆரோஹள்ளி, ஜிகினி ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன் பிறகு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதில் முருகேஷ் நிரானி பேசியதாவது:-
கர்நாடகத்தில் உள்ள தொழிற்பேட்டைகளில் உலக தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையின்றி மின்சாரம், குடிநீர் வழங்க வேண்டும். பாதாள சாக்கடை வசதிகள் சரியான முறையில் செயல்பட வேண்டும். சில அதிகாரிகள் சரியாக செயல்படாமல் உள்ளனர். அதிகாரிகள் சரியாக செயல்பட தவறினால், அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்கட்டமைப்பு வசதிகள்
முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகத்தை முதல் இடத்திற்கு கொண்டு வருவது தான் எங்களின் நோக்கம். அதற்கு தேவையான தொழில் முதலீடுகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். உலக தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்காவிட்டால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்ப மாட்டார்கள். அதனால் இந்த வசதிகளை ஏற்படுத்த தேவையான அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கர்நாடகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும். மோசமான நிலையில் உள்ள தொழில் நிறுவனங்கள் சரியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இந்த துறையின் மந்திரியாக இருக்கும்வரை ஒரு நிறுவனம் கூட மூடப்படக்கூடாது. அதை நான் அனுமதிக்க மாட்டேன். விவசாயிகளை கட்டாயப்படுத்தி நிலங்களை கையகப்படுத்த மாட்டோம். இந்த விஷயத்தில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முருகேஷ் நிரானி பேசினார்.