கர்நாடகத்தில் பொதுஇடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட அனுமதியா? - மந்திரி ஈசுவரப்பா பதில்
கர்நாடகத்தில் பொதுஇடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக மந்திரி ஈசுவரப்பா பதிலளித்துள்ளார்.
சிவமொக்கா:
விநாயகர் சதுர்த்தி பண்டிகை
கேரளா, மராட்டிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. ஆனாலும் கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில் வருகிற 10-ந்தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போல இந்தாண்டும் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை விமரிசையாக கொண்டாட அரசு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட அனுமதி அளிக்க வருகிற 5-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு எடுப்பதாக பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார்.
பொது இடங்களில் அனுமதியா?
இதுதொடர்பாக சிவமொக்காவில் மாநில பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பாவிடம் நிருபர்களுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட இந்துஅமைப்பினர், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து விநாயகர் சதுர்த்தி பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட அனுமதி அளிப்பது குறித்து அரசு பரிசீலனை நடத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட அரசு அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.