கலசபாக்கம் அருகே; கார் மோதி மகனுடன் தம்பதி பலி

கலசபாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மகனுடன் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-09-01 18:52 GMT
கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மகனுடன் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.  

8 மாத கர்ப்பிணி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி கிராமம் சுப்பராயநகர் மேல் வீதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் ரகு (வயது 24). இவரது மனைவி சுமித்ரா (22). இவர்களது 1½ வயது மகன் பூமிநாதன். சுமித்ரா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். 

இந்த நிலையில் ரகு தனது மனைவி மற்றும் மகனுடன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். 

பின்னர் அங்கிருந்து மனைவி, மகனுடன் ரகு ஊத்தங்கரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றாா். 

போளூரில் இருந்து கடலாடி வழியாக கலசபாக்கம் ஒன்றியம் அருணகிரிமங்களம் அருகே உள்ள பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது, செங்கத்தில் இருந்து வேலூர் நோக்கி வந்த கார் திடீரென ரகு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் சிறிது தூரம் இழுத்து சென்று மரத்தில் மோதி கார் கவிழ்ந்தது. 

3 பேர் பலி

இந்த விபத்தில் ரகு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் படுகாயம் அடைந்த சுமித்ரா, குழந்தை பூமிநாதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுமித்ரா, பூமிநாதன் இருவரும் உயிரிழந்தனர். 

இந்த விபத்து குறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

விபத்தில் 8 மாத கர்ப்பிணி, அவரது கணவர் மற்றும் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்