ஓபன்னீர்செல்வம் மனைவி உடல் இன்று தகனம்

பெரியகுளத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

Update: 2021-09-01 17:58 GMT
தேனி: 

ஓ.பன்னீர்செல்வம் மனைவி
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (வயது 63) உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.


அவருடைய உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரம் தெருவில் உள்ள அவருடைய வீட்டுக்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது. விஜயலட்சுமியின் உடலை பார்த்ததும் அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். ஓ.பன்னீர்செல்வமும் துக்கம் தாங்காமல் அழுதார். பின்னர் சமுதாய வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர்கள்
விஜயலட்சுமியின் உடலுக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், வெல்லமண்டி நடராஜன், எம்.சி.சம்பத், வீரமணி, செம்மலை, ஜெயபால், ஆர்.பி.உதயக்குமார், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, இளைஞரணி தலைவர் வினோத் டி.செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினர்.
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடைய செல்போன் மூலமாக அவருடைய தாயார் பிரேமலதா விஜயகாந்த் தொடர்பு கொண்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார்.

இறுதிச்சடங்கு
இதேபோல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சோழவந்தான் மணிகண்டன், முன்னாள் எம்.பி.க்கள் பிரபாகரன், பார்த்திபன், வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.


விஜயலட்சுமியின் உடலுக்கு இறுதி சடங்கு இன்று (வியாழக்கிழமை) செய்யப்படுகிறது. பின்னர் காலை 10 மணியளவில் அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெரியகுளம் வடகரையில் உள்ள நகராட்சி எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யப்பட உள்ளது.

மேலும் செய்திகள்