சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்

கடமலைக்குண்டுவில் கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்துவதற்கு சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் குவிந்தனர்.;

Update:2021-09-01 23:16 IST
தேனி : 

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த முகாம்களில் 100-க்கும் குறைவான பொதுமக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி வந்தனர். இந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பொதுமக்கள் மட்டுமே ஊரக வேலைகளில் ஈடுபட முடியும் என ஊராட்சிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் கடந்த சில நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய ஊராட்சிகளில் நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது. கடந்த வாரம் மூலக்கடை, மயிலாடும்பாறை ஊராட்சிகளில் நடந்த முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தினர். 

இந்த நிலையில் நேற்று கடமலைக்குண்டு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஊரக வேலை கிடைக்காமல் போய் விடும் என்ற எண்ணத்தில் காலை முதலே பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து தடுப்பூசி செலுத்தினர். அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நின்றனர். மேலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியவில்லை. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

போலீசார் யாரும் வராத நிலையில் கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் மருத்துவ குழுவினர் கூட்டத்தை கட்டுப்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தினர். மேலும் கடமலை-மயிலை ஒன்றியத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்