திருப்பூரில் நேற்று ஒரே நாளில் 41 இடங்களில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

திருப்பூரில் நேற்று ஒரே நாளில் 41 இடங்களில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

Update: 2021-09-01 16:29 GMT
திருப்பூர், 
திருப்பூரில் நேற்று ஒரே நாளில் 41 இடங்களில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி ஆய்வு செய்தார். 
கொரோனா தடுப்பூசி 
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கான டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. 
இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் இருந்து வருவதால், அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக மாநகரில் லட்சக்கணக்கான பனியன் நிறுவன தொழிலாளர்கள் இருப்பதால் மாநகராட்சி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறது. 
ஒரே நாளில் 30 ஆயிரம் பேருக்கு...
அந்த வகையில் நேற்று திருப்பூர் மாநகரில் ஆசிரியர்கள், பனியன் நிறுவன தொழிலாளர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், விடுதி சமையலர்கள், விடுதி காப்பாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் அங்கேரிபாளையம் கொங்கு வேளாளர் மேல்நிலைப்பள்ளி, ஜீவாகாலனி கூட்டுறவு திருமண மண்டபம், குலாலர் மண்டபம், காயத்ரி மஹால், கே.பி.என்.காலனி சமுதாய கூடம், ராமசாமி முத்தம்மாள் கல்யாண மண்டபம், முருகம்பாளையம் சாய ஆலை அலுவலகம் என 4 மண்டலங்கள் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் 41 இடங்களில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 
இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார். அப்போது தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர் பார்வையிட்டார். தடுப்பூசிகளின் இருப்பு குறித்தும் கேட்டு தெரிந்துகொண்டார். இதில் மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவ் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாநகர பகுதியில் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்